உள்ளூர் செய்திகள்
ஆளுநரிடம் மனு அளித்த அண்ணாமலை

பிஜிஆர் எனர்ஜி ஒப்பந்த விவகாரம்- ஆளுநரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மனு

Published On 2022-03-21 13:57 GMT   |   Update On 2022-03-21 13:57 GMT
அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும், இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரித்திருந்தார்.
சென்னை:

ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்கு, முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

அவரது குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்க திட்டம் குறித்து அண்ணாமலைக்கு புரிதலில்லை என்றும், அரசுக்கு அவப்பெயர் உண்டாகும் வகையில் விமர்சித்து உள்ளார் என்றும் கூறினார். மேலும், அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகள் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து, மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் குறித்து எடுத்துரைத்தனர். மேலும்,  தமிழக அரசின் பிஜிஆர் எனர்ஜி மின்சார ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக கூறி, அதற்கான ஆதாரங்களுடன் மனு அளித்தனர். 

ஆளுநருடனான சந்திப்பின்போது எடுத்த புகைப்படத்தை அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ஆளும் தி.மு.க அரசு, அனைத்து விதிகளையும் மீறி, சமீபத்திய மின் திட்டத்தில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக இருப்பது குறித்த மனுவை ஆளுநரிடம் வழங்கியதாக அண்ணாமலை கூறி உள்ளார்.

Tags:    

Similar News