உள்ளூர் செய்திகள்
செய்துங்கநல்லூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள சாலை பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

செய்துங்கநல்லூரில் சாலை பணிகளை வேகப்படுத்த கோரிக்கை

Published On 2022-03-15 10:49 GMT   |   Update On 2022-03-15 10:49 GMT
வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருவதால் செய்துங்கநல்லூரில் நடைபெற்று வரும் சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்துங்கநல்லூர்:

திருச்செந்தூரில் இருந்து கல்லிடைக்குறிச்சி வரை தொழில் வழிச் சாலைப்பணிகள் கடந்த வருடம் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது.

சுமார் ரூ.635 கோடி மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் வி.எம்.சத்திரத்தில் இருந்து கிருஷ்ணாபுரம் வரை மிக விரைவாக நடந்தது. அதன் பின் செய்துங்கநல்லூர் ஊருக்குள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. 

செய்துங்கநல்லூரை பொறுத்தவரை நகரை அழகு படுத்தி இருபுறமும் சாக்கடை வறுகால் அமைத்து இரண்டு பஸ் நிறுத்தம், இலவச கழிவறை, கண்காணிப்பு காமிரா என நவீன வசதியில் பணிகள் நிறைவேற உள்ளது. எனவே இந்த பணி தொடங்கிய உடன் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஆனால் இந்த பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. செய்துங்கநல்லூர் மக்கள் அதிகமாக கூடும் சந்தை அருகே கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாதி தோண்டப்பட்ட பாலம் வேலை அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.  இதனால் ஆலயத்தில் இருந்து வரும் சாக்கடை வெளியே செல்ல முடியாமல் அங்கேயே தேங்கி கிடக்கிறது.

 எனவே இந்தபகுதியில் உள்ள வர்களுக்கும், சந்தைக்கு வந்து செல்பவர்களுக்கும் நோய் தொற்று ஏற்படும் அவல நிலைஏற்பட்டுள்ளது. 

மேலும் வாகனங்கள் செல்லும் போது தூசி பறந்து, இருசக்கரவாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகிறார்கள். சாலையில் இருந்து கிளம்பும் புழுதியால் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.

 எனவே செய்துங்கநல்லூர் நகரத்தில் உள்ள பணிகளை மிக விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News