உள்ளூர் செய்திகள்
நகையை பறிகொடுத்த சுப்புலட்சுமி

உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறித்த பெண்

Published On 2022-03-11 09:30 GMT   |   Update On 2022-03-11 09:30 GMT
எட்டயபுரத்தில் உதவித்தொகை பெற்றுத் தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எட்டயபுரம்:

ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கீழமுடிமன் மேல தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (வயது 56). இவர் நேற்று ஒட்டப்பிடாரம் அருகே உள்ள அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக காண்பித்துவிட்டு வரும் வழியில், அங்கு நின்று கொண்டிருந்த 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுப்புலட்சுமியிடம் பேச்சுக் கொடுத்துள்ளார்.

தன்னுடைய பெயர் சரஸ்வதி என்றும், அரசு உதவித்தொகை கிடைக்காதவர்களுக்கு உதவித்தொகை பெற்று தரும் பணி செய்து வருவதாக கூறியுள்ளார்.

அப்போது சுப்புலட்சுமி தான் முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பம் செய்து தனக்கு கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் எந்த தாலுகா அலுவலகம் என்று கேட்டுள்ளார். அதற்கு சுப்புலட்சுமி எட்டையபுரம் தாலுகா அலுவலகம் என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட அந்தப் பெண், எட்டயபுரம் தாலுகா அலுவலகத்தில் எனக்கு எல்லோரையும் நன்றாக தெரியும்.

கடந்த வாரம்கூட 3 பேருக்கு உதவித்தொகை பெற்றுத் தந்துள்ளேன். என்னுடன் வாருங்கள் நான் உதவித்தொகை பெற்றுத் தருகிறேன் என்று கூறி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுப்புலட்சுமி அந்தப் பெண்ணுடன் எட்டயபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்றார்.

அங்கு சுப்புலட்சுமியை பார்த்து ஏழை போன்று இருந்தால் மட்டும்தான் உதவி தொகை கிடைக்கும். எனவே காதில் மாட்டி, உள்ள கம்மல் மற்றும் காது மாட்டி செயின் ஆகியவை தன்னிடம் கொடுக்குமாறு அந்தப் பெண் கேட்டுள்ளார் . இதையடுத்து சுப்புலட்சுமியும் 4 கிராம் மதிப்புள்ள தங்க கம்மல், காதுமாட்டி செயின் ஆகியவற்றை அந்தப் பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

அதைப் பெற்றுக் கொண்டதும் ஓரமாக நில்லுங்கள், மேலே சென்று அதிகாரியை பார்த்து பேசி பின்னர், அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

வெகுநேரமாகியும் அந்தப் பெண் வரவில்லை என்பதால், சுப்புலட்சுமி தாலுகா அலுவலகம் சென்று அந்த பெண்ணை தேடி உள்ளார். ஆனால் அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் கணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தினர்.

தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளையும் ஆராய்ந்து வருகின்றனர்.
Tags:    

Similar News