உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலை அமராவதி அணையில் நீர்மட்டம் குறைந்ததால் மீன்கள் வரத்து அதிகரிப்பு

Published On 2022-03-01 04:37 GMT   |   Update On 2022-03-01 04:37 GMT
அணையில் நீர் இருக்கும் போது தினமும் ஒரு முறை சராசரியாக 150 முதல் 300 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்படும்.
உடுமலை:

உடுமலை அருகேயுள்ள அமராவதி அணையில் மீன் வளர்ச்சிக்கழகம் சார்பில் கட்லா, மிர்கால், ரோகு, திலேப்பியா உள்ளிட்ட மீன் ரக குஞ்சுகள் அணையில் இருப்பு செய்து, வளர்க்கப்படுகிறது. நன்கு வளர்ந்த மீன்கள் பிடிக்கப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அணையில் இரவு நேரத்தில் வலை விரித்து, தலா 2 பேர் வீதம், 18 குழு மீனவர்கள் பரிசல் வழியாக மீன் பிடித்து வருகின்றனர்.

அணையில் நீர் இருக்கும்போது தினமும் ஒரு முறை சராசரியாக 150 முதல் 300 கிலோ வரை மீன்கள் பிடிக்கப்படும். கடந்தாண்டு அணை இரு முறை நிரம்பியதோடு நீர் இருப்பும் 85 அடிக்கும் மேல் பல மாதமாக இருந்ததால் மீன் பிடிப்பு பெருமளவு பாதித்தது.

இந்நிலையில் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் அணை நீர் மட்டம் வேகமாக சரிந்தது. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 90 அடியில், 60.04 அடி நீர்மட்டம் உள்ளது.

அணையிலிருந்து பாசனத்திற்கு வினாடிக்கு ஆற்றில், 200 கன அடி நீரும், பிரதான கால்வாயில் 440 கன அடி நீரும், கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில் 50 அடி நீர் என 690 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர்மட்டம் குறைந்ததால் மீன் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த பல மாதமாக மீன் பிடிப்பு பாதித்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அதிகரித்துள்ளது.

இதனால் மாலை மற்றும் காலை என இரு நேரங்களில் மீன் பிடிக்கும் பணி நடந்து வருகிறது. தினமும்  ராசரியாக 500 முதல் 600 கிலோ வரை மீன் வரத்து உள்ளது. பிடிக்கப்படும் மீன்கள் அமராவதி நகர் மீன் பண்ணை மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது மீன் வரத்து அதிகரித்துள்ளதால் கூடுதல் மீன் பிடிக்கும் குழுவினரை இப்பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருவதால் திருமூர்த்தி அணை மீனவர்களையும், அமராவதி அணையில் மீன் பிடிக்க பயன்படுத்த மீன் வளர்ச்சி கழகம் திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News