உள்ளூர் செய்திகள்
பாமக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: தனித்து களம் இறங்கும் 5 கட்சிகள்- சாதிக்குமா என அரசியல் களத்தில் எதிர்பார்ப்பு

Update: 2022-01-28 06:18 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தனித்து களம் காணும் 5 கட்சி வேட்பாளர்களும் சில இடங்களிலாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காணும் நிலையில், 5 கட்சிகள் தனித்து களம் இறங்குகின்றன.

பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதிமய்யம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் களம் இறங்கும் வேட்பாளர்களுக்கு எதிராக அந்த பகுதிகளில் செல்வாக்கு மிகுந்த நபர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளன.

வடமாவட்டங்களில் செல்வாக்குடன் திகழும் பா.ம.க., துணிச்சலுடன் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதில் சில இடங்களில் அந்த கட்சி வெற்றியும் பெற்றது.

அந்த நம்பிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் பல இடங்களில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்று மீண்டும் தனித்து களம் இறங்கி இருக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. கூட்டணில் இருந்து வெளியேறிய தே.மு.தி.க., டி.டி.வி. தினகரனின் கட்சியான அ.ம.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதன் பிறகு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்ட தே.மு.தி.க., நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது.இதுதொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முதல் சென்னையில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தே.மு.தி.க. துணை செயலாளர் பார்த்த சாரதி கலந்து கொண்டார்.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் தினகரன் மற்றும் 40-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் பிரேமலதா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது அவர் தனித்து களம் இறங்கி மக்களை சந்தித்து வெற்றி பெறும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இன்று 2-வது நாளாக பிரேமலதா கட்சியினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சி. ஆனந்தன் மற்றும் பகுதி செயலாளர்கள் பங்கேற்றனர். தொடர்ச்சியாக 7 நாட்கள் சென்னை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரேமலதா திட்டமிட்டுள்ளார்.

நிச்சயம் நமக்கு எதிர் காலம் உண்டு. மக்களை நம்பிக்கையோடு சந்தியுங்கள் என்று அவர் கட்சியினரை ஊக்குவித்து வருவதாக மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஊரக உள்ளாட்சி தேர்தலை போன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையும் தனித்தே சந்திக்கிறது.

சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நகர்ப்புறங்களிலேயே அதிக ஓட்டு கிடைத்தது. கிராமப்புறங்களில் எதிர்பார்த்த அளவு மக்கள் செல்வாக்கு கிடைக்கவில்லை.

அப்போது 3.43 சதவீத வாக்குகள் நகர்ப்புறங்களிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருந்தது. இந்த நம்பிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் வெற்றி பெறும் முனைப்புடன் கமல்ஹாசனும், கட்சி நிர்வாகிகளும் களம் இறங்கி உள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 3-வது இடத்தை பிடித்த நாம் தமிழர் கட்சி 6.58 சதவீத ஓட்டுகளை பெற்று இருந்தது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட கிராமப்புற வார்டுகளில் அந்த கட்சியினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

அந்த நம்பிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கி உள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு நாம் தமிழர் கட்சி வளர்ந்துள்ளதாகவும், எனவே நிச்சயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவோம் எனவும் அந்த கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களே தினகரன் கட்சியில் செயல்பட்டு வருகிறார்கள்.

இதன் மூலம் அ.ம.மு.க. போட்டியிடும் இடங்களில் அது அ.தி.மு.க. வெற்றியை பாதிக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக டி.டி.வி. தினகரன் அளித்துள்ள பேட்டியில், ‘‘வெற்றி பெறும் நம்பிக்கையுடன் களம் இறங்கி உள்ளோம். நிச்சயம் இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், தனித்து களம் காணும் இந்த 5 கட்சி வேட்பாளர்களும் சில இடங்களிலாவது தாக்கத்தை ஏற்படுத்துவார்களா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு தேர்தல் முடிவுகளில்தான் விடைதெரியும்.

Tags:    

Similar News