உள்ளூர் செய்திகள்
கொலை செய்யப்பட்ட இசக்கி

தென்காசி அருகே ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை

Published On 2022-01-21 05:25 GMT   |   Update On 2022-01-21 05:25 GMT
தென்காசி அருகே இன்று அதிகாலையில் ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி:

தென்காசி அருகே உள்ள கீழ இலஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் இசக்கி என்ற சின்ன இசக்கி (வயது38). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

வழக்கமாக இசக்கி வீட்டிற்கு இரவு காலதாமதமாக வந்ததால், வீட்டு முன்பு உள்ள திண்ணையில் படுத்து தூங்கி விடுவாராம். அதுபோல நேற்று இரவும் காலதாமதமாக வந்த இசக்கி, வீட்டு முன்புள்ள திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார்.

இன்று அதிகாலை அங்கு வந்த மர்ம கும்பல் தூங்கி கொண்டிருந்த இசக்கியை சரமாரி அரிவாளால் வெட்டியது. கழுத்து, தலை, முகம் என்று கொடூரமாக தாக்கியதால் அவரது முகம் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். அதன் பின்னர் அந்த கும்பல் வந்த சுவடு தெரியாமல் தப்பி சென்று விட்டது.

இன்று அதிகாலை வழக்கம் போல் எழுந்த நந்தினி கோலம் போடுவதற்காக கதவை திறந்தார். அப்போது கணவர் இசக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து கதறித்துடித்தார்.

அவரது உறவினர்களும் அங்கு வந்து கதறி அழுதனர். அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் தென்காசி டி.எஸ்.பி. மணிமாறன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட இசக்கி உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள்.

சம்பவம் நடந்த போது அலறல் சத்தம் எதுவும் கேட்காததால், மர்ம கும்பல் இசக்கி ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த பகுதியில் ஒரு சி.சி.டி.வி. கேமிரா உள்ளது. அந்த கேமிராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கொலை நடந்த இடத்திற்கு இன்று காலை போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து தென்காசி சாலை வரை பல்வேறு இடங்கள் வழியாக சென்று திரும்பி வந்தது. இதனால் கொலையாளிகள் வெளியூருக்கு காரில் தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட இசக்கி மீது குற்றாலம், தென்காசி போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. மாம்பழம் ஏலம் விடுவது தொடர்பாக நடந்த மோதலில் இசக்கி மீது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே அந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இசக்கி கொலை செய்யப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News