உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம்.

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-01-20 09:18 GMT   |   Update On 2022-01-20 09:18 GMT
விளைநிலம், நீர் நிலைகளில் மது பாட்டில்கள் வீசுவதை தடுக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் காவல் துறை சம்பந்தப்பட்ட 
கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சார்பில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

விவசாய விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் மது அருந்தி விட்டு மது பாட்டில்களை உடைத்தும், வீசியும் விட்டு சென்று விடுவதால் பயிர் காலங்களில் கால்நடைகள் மற்றும் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

ஆகவே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 
பாரம்பரிய நெல்ரகங்களை கைக்குத்தல் முறை மூலம் அரிசியாக 
மதிப்பு கூட்டி மாற்றம் செய்வதற்கு வெளி மாவட்டத்திற்கு 
செல்லும்போதும் போக்குவரத்து காவல்துறை மூலம் சோதனைக்காக 
உரிய ஆவணங்களை கேட்கப்படுகிறது.

அப்பொழுது சிறுகுறு விவசாயிகளால் அந்த ஆவணங்களை கொடுக்க நடைமுறை சிக்கல் உள்ளது. 

எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிபந்தனையின்றி விளைபொருட்களை கொண்டு செல்ல அனுமதி 
வழங்க வேண்டும். 

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் வாயிலாக கடன் பெற்ற விவசாயிகளுக்கு வங்கியினால் ஏற்படுத்தப்படும் மன அழுத்தத்தை காவல்துறையினருக்கு தெரிவிக்கும் வகையில் விவசாயிகளுக்கென்று பிரத்யேகமாக மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் ஒரு காவல் உதவி அமைப்பை தொடங்க வேண்டும்.

கடலோரப் பகுதிகளில் இருந்து வடமாநிலங்களுக்கு உப்பு ஏற்றி 
செல்லும் வாகனங்கள், உப்பை சரியாக மூடாமல் செல்வதால் 
சாலைகளில் வழிநெடுகிலும் கொட்டி நீர்நிலைகள் மற்றும் 
அதனை ஒட்டியுள்ள விளை நிலங்களும் பாதிக்கப்படுகிறது. 

இதனை உடனடியாக தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்று நீரில் மருத்துவ கழிவுகள் கலக்கப் படுவதை கட்டுப்படுத்தும் 
வகையில் காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இதுபோன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News