உள்ளூர் செய்திகள்
கே.பி.அன்பழகன்

வருமானத்துக்கு அதிகமாக ரூ.11 கோடி சொத்து குவித்ததாக கே.பி.அன்பழகன் மற்றும் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு

Published On 2022-01-20 06:27 GMT   |   Update On 2022-01-20 08:56 GMT
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை:

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழல் தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஊழல் தடுப்பு சட்டப்பிரிவு 13(2), 13(1) சட்டப்பிரிவுகளின் கீழ் பல்வேறு குற்றச்சாட்டுகள் கே.பி.அன்பழகன் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில் 62 வயதாகும் கே.பி.அன்பழகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது மனைவி மல்லிகா 2-வது குற்றவாளியாகவும், 2-வது மகன் சசிமோகன் 3-வது குற்றவாளியாகவும், மூத்த மகன் சந்திரமோகன் 4-வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சந்திரமோகன் மனைவி வைஷ்ணவி 5-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த கே.பி.அன்பழகன் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டசபை தொகுதியில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 23.5.2016 முதல் 6.5.2021 வரை உயர்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து உள்ளார். 1.11.2020 முதல் 6.5.2021 வரை வேளாண் துறை அமைச்சராக கூடுதல் பொறுப்பையும் அவர் கவனித்துள்ளார் என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சராக இருந்த கால கட்டத்தில் கே.பி.அன்பழகன் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

கே.பி.அன்பழகனும், அவரது குடும்பத்தினரும் இணைந்து ஆஸ்பத்திரி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். ஸ்டைல்ஆப் அன்பு சூப்பர் ஸ்பெசாலிட்டி என்ற பெயரிலான ஆஸ்பத்திரி தொடங்கியது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதற்கு முறைகேடான வழியில் பணம் எடுக்கப்பட்டுள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கே.பி.அன்பழகன் தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதுடன் பல தொழில்களில் முதலீடு செய்துள்ளதாகவும், ரூ.1 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரத்து 859 மதிப்பிலான அளவுக்கு இந்த முதலீடுகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கே.பி.அன்பழகன் மற்றும் அவரது குடும்பத்தினர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் 21 கோடியே 43 லட்சத்து 35 ஆயிரத்து 418 ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சேர்த்துள்ளனர்.

ஆனால் இந்த கால கட்டத்தில் கே.பி.அன்பழகன் தான் பெற்ற வருமானத்தின் அடிப்படையில் ரூ.10 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 663 மதிப்பில் மட்டுமே சொத்துக்களை சேர்த்திருக்க வேண்டும்.

ஆனால் ரூ.11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 மதிப்பில் கூடுதலாக கே.பி.அன்பழகன் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என லஞ்ச ஓழிப்பு போலீசார் குற்றம் சாட்டி உள்ளனர்.

கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரராகவும் இருந்துள்ளனர். இதன் மூலம் பல்வேறு வழிகளிலான முதலீடுகளையும் அவர் நிறுவனங்களில் செலுத்தி இருக்கிறார். இது தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முதல் தகவல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதன் அடிப்படையிலேயே உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சரான கே.பி.அன்பழகன் மீது வழக்கு போடப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த விசாரணையில் கே.பி.அன்பழகன் குடும்பத்தினர் ரூ.11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரத்து 755 மதிப்பிலான சொத்துக்களை முறைகேடாக வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையிலேயே இன்று தர்மபுரி, சேலம், சென்னை மாவட்டங்களில் 57 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News