உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சட்டவிரோத மது விற்பனை 2 நாட்களில் 134 பேர் கைது

Published On 2022-01-18 07:13 GMT   |   Update On 2022-01-18 07:13 GMT
கரூர் மாவட்டத்தில் தடையை மீறி கடந்த 2 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 134 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர்:

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருவள்ளுவர் தினத்தையொட்டி கடந்த 15 ஆம் தேதி மற்றும் முழு ஊரடங்கால் நேற்று முன்தினம் (கடந்த 16 ஆம் தேதி) ஆகிய இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்கள், ஹோட்டல் பார்களில் மது விற்பனை தடை செய்யப்பட்டிருந்தது.

இந்த 2 நாட்களில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்காக மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து, விற்பனை செய்த 134 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 1,326 மதுபான பாட்டில்கள், 2 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளன.

மேலும், தீவிர வாகன சோதனையில், முகக்கவசம் அணியாமல் வெளியில் வந்த 120 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பொதுஇடங்கள், கடைகள் போன்ற இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்தவர்கள் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதத்தொகையாக ரூ.2,500 விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் விதிகளை மீறி 2 சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த 17 பேர் மீது வழக்குகள் பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடந்த 8 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை ஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாதவர்கள் மீது 1,010 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.2.38 லட்சம் அபராதம், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.6,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News