உள்ளூர் செய்திகள்
சசிகலா

அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைய வேண்டும்- சசிகலா மீண்டும் வேண்டுகோள்

Published On 2022-01-15 09:32 GMT   |   Update On 2022-01-15 09:32 GMT
எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சியை மலர செய்ய நன்றி மறவாத நல்ல மனதோடு அ.தி.மு.க.வினர் ஒருங்கிணைய வேண்டும் என சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எம்.ஜி.ஆர் உருவாக்கி வளர்த்த பேரியக்கத்தை தலைமையேற்று, அதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் ஏற்றி, அகில இந்திய அளவில் மூன்றாவது பெரிய கட்சியாக வளர்த்தெடுத்தவர் நம் ஜெயலலிதா. தேசிய நலனில் அக்கறை கொண்டிருந்தாலும், தமிழக நலனை விட்டுக் கொடுக்காத உணர்வை வளர்த்தெடுத்த நம் இருபெரும் தலைவர்கள் காட்டிய அதே வழியில் இந்த இயக்கத்தை கொண்டு செல்லும்போது தான் நம் தலைவர்களின் கனவு நனவாகும்.

நம் இயக்கம் விருட்சமாக பரந்து இருப்பதற்கு முழு முதற் காரணமாக இருப்பது, வேர்களாகிய நம் தொண்டர்கள் தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. அதனால் தான் கழகத்தின் சட்டவிதிகளில் கூட, தொண்டர்கள் தான் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர். அதுபோன்று, நம் அடிமட்ட தொண்டர்கள் விரும்பும் தலைமையால் தான், நம் கட்சியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று கருதியே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார்.

திரையுலகிலும் சரி, அரசியல் பொது வாழ்வில் அவர் ஈடுபட்ட காலங்களிலும் சரி, அவருக்கு துரோகம் செய்தவர்களைக் கூட மன்னித்து அரவணைத்து அழைத்துச் சென்றவர் தான் எம்ஜிஆர். அப்படி எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வளர்த்த இயக்கத்தை ஒன்றிணைப்பது காலத்தின் கட்டாயமாக நம் தொண்டர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.

இதே வேண்டுகோளைத் தான் நானும் தொடர்ந்து முன் வைத்து வருகிறேன். அனைவரும் இதை உணர்ந்தால் மட்டுமே தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியை அமைக்க முடியும்.

மக்களின் மனங்களில் இன்றைக்கும் நிரந்தரமாக குடி கொண்டிருக்கும் நம் புரட்சித்தலைவரின் 105-வது பிறந்த நாளில், ஏழை எளியவர்கள், முதியவர்கள், மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள், கொரோனா தாக்கத்தால் தங்களது பெற்றோர்களை இழந்தவர்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்தும், ஜெயலலிதாவின் திருவுருவ சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துவோம்.

அதே சமயத்தில், கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு அனைவரும் முகக்கவசம் அணிந்து, போதிய சமூக இடைவெளியுடன் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, நம் புரட்சித் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடுமாறு உங்களையெல்லாம் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

'நன்றி மறவாத நல்ல மனதோடு நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, இந்த நன்னாளில் அவருடைய பொற்கால ஆட்சியை மறுபடியும் தமிழகத்தில் மலர உறுதி மொழி எடுத்துக்கொள்வோம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

Tags:    

Similar News