உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத்

பிரமாண பத்திரத்தில் தவறான தகவல்- ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் மீது வழக்கு பதிய கோர்ட்டு உத்தரவு

Published On 2022-01-08 12:07 GMT   |   Update On 2022-01-08 12:07 GMT
வேட்புமனு தாக்கலின் போது பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தேனி மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு தேனி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தேனி:

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 2009-ம் ஆண்டு தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் ஜனநாயக நெறிகளுக்கு மாறாக தங்களது வேட்புமனுவுடன் கூடிய பிரமாண பத்திரத்தில் சொத்துக்கள், வருவாய், கல்வித்தகுதி ஆகியவை குறித்து தவறான தகவல் அளித்து தேர்தலில் வெற்றி பெற்றதாக எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான குற்றவியல் வழக்குகளின் மீது விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றத்தில் தேனி மாவட்ட முன்னாள் தி.மு.க. இளைஞரணி செயலாளர் மிலானி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகியோர் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்பதால் பொதுநல நோக்குடன் வழக்கு தொடர்ந்துள்ள தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீது தேனி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் விசாரணை நடத்தினார். இந்த 2 வழக்குகள் குறித்தும் தனித்தனி உத்தரவு பிறப்பித்தார். புகார்கள் தொடர்பாக தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த வேண்டும். விசாரணை அறிக்கையை பிப்ரவரி 7-ந் தேதியோ அல்லது அதற்குள்ளாகவோ நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரநாத் ஆகிய 2 பேரையும் வாரண்ட் இல்லாமல் கைது செய்ய கூடாது. மனுதாரர் மற்றும் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.

Tags:    

Similar News