உள்ளூர் செய்திகள்
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

உடுமலை அரசு கல்லூரியில் பொன்விழா கொண்டாட்டம்

Published On 2021-12-29 09:40 GMT   |   Update On 2021-12-29 09:40 GMT
பாரதியார் பல்கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
உடுமலை:

உடுமலை அரசு கலைக் கல்லூரி பொன்விழா கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. பொன்விழாக் குழுத்தலைவர் நல்லசேனாபதி வரவேற்றுப் பேசினார். கல்லூரியின் முன்னாள் மாணவர்சங்க அறக்கட்டளையைத் தொடங்கி வைத்தவரும் பொன்விழாக் குழுவின் புரவலருமான டாக்டர் கே.ஷாஜகான் முன்னிலை வகித்தார்.

கல்லூரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்து உரையாற்றினார். 20 ஆண்டுகளாக கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க அறக்கட்டளை ஆற்றிய அரும்பணிகள் குறித்தும், பொன்விழா கொண்டாட்டங்கள் குறித்தும், கல்லூரியின் தேவைகள் குறித்தும் முன்னாள் மாணவர் சங்க செயலாளர் ஆடிட்டர் ஆர்.கந்தசாமி பேசினார்.

50 ஆண்டுகளுக்கு முன் உடுமலைப்பேட்டை அரசு கலைக் கல்லூரியினை உருவாக்க காரணமாக இருந்தவர்களுள் முதன்மையானவரான முன்னாள் அமைச்சர் எஸ்.ஜே.சாதிக்பாட்ஷாவின் மகன் எஸ்.ஜே.எஸ்.முஸ்தாக் பாட்ஷா கல்லூரி திறப்பு விழா கல்வெட்டினை திறந்து வைத்தார். பேராசிரியர் ஜெய்சிங் வாசித்தளித்த வாழ்த்துப்பாவினை ஏற்று கருத்துரை வழங்கினார்.

பாரதியார் பல்கலைக்கழக மண்டல கிரிக்கெட் போட்டிகளை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் முன்னதாகதொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார்.

அவர், கல்லூரிக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். மாணவர் இருக்கைகளையும் ,கபடி விளையாட்டிற்கான  ற்கான ரப்பர் மேட்டினையும், மாணவர் இருபாலருக்கும் தனித்தனியே உடற்பயிற்சி உபகரணங்களை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

அவர், உடுமலை மண்ணில் தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.ஜே.சாதிக் பாட்ஷா அரும்பெரும் முயற்சியால் உருவாக்கப்ப்பட்ட கல்லூரியில் எதிர்கால வரலாற்றை மாணவர்களாகிய நீங்கள் படைக்க வேண்டும். 

தேசத்திற்காகப் பாடுபட்ட மாணவர்களின் வரலாற்றை எடுத்துரைத்து இளைஞர்களை நம்பியே இந்தத்தேசம் உள்ளதாகவும் கல்லூரிக்கும் நாட்டிற்கும் பெற்றோர்க்கும் சிறப்பு சேர்க்கும் விதமாய் இருக்க வேண்டும் என்றும் மேடைக்கு முன்பு உட்கார்ந்திருக்கின்ற மாணவர்களாகிய நீங்கள், கல்லூரியின் 75 வது ஆண்டு விழாவில் மேடையில் சிறப்பு விருந்தினராக அமர வேண்டும் என்றும் எழுச்சியுரை ஆற்றினார்.

பல்கலைக்கழக தேர்வுகளில் பாடவாரியாக முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் ரொக்கப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

வணிகவியல் துறையில் முதன்மை இடம்பெற்ற மாணவர்களுக்கு ஒருகிராம் தங்க நாணயங்களை கூடுதல் சிறப்புப்பரிசாக எல்.ஐ.சி. சுரேஷ் வழங்கினார். பொன்விழா  குழுச் செயலர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆடிட்டர் எஸ்.கண்ணன், தேவேந்திரன், ஜோசப், சிக்கந்தர், செல்வராஜ், அங்குராஜ், முகமது அலி ஜாபர், விஜயகுமார், கிருஷ்ணன், மலர்வண்ணன், உடற்பயிற்சி இயக்குநர் மனோகர் செந்தூர் பாண்டி உள்ளிட்ட கல்லூரிப் பேராசிரியர்களும், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகளும், மாணவர்களும் செய்திருந்தனர்.
Tags:    

Similar News