உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாதிக்கும் பார்த்தீனியம் செடிகள்

Published On 2021-12-19 06:50 GMT   |   Update On 2021-12-19 06:50 GMT
இந்த களைச்செடி ஒவ்வொரு சீசனிலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகும்.
குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய சாகுபடியில்  பார்த்தீனியம் களை பரவல் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது.

தொடர் மழைக்குப்பிறகு சாகுபடி மேற்கொள்ளப்படாத நிலங்கள் முழுவதும்  இச்செடிகள் ஆக்கிரமித்துள்ளன. வழக்கமாக பருவமழைக்குப்பிறகு  கால்நடைகளின் பசுந்தீவனத்துக்கு உதவும் வகையில் பல்வேறு செடிகள் முளைப்பது வழக்கம்.

ஆனால் பார்த்தீனியம் பரவலால் பிற செடிகள் முளைக்காமல் கால்நடைகளின் பசுந்தீவனத்துக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

ஒவ்வொரு முறையும், அதிக செலவிட்டு இக்களைச்செடியை கட்டுப்படுத்த களைக்கொல்லிஉள்ளிட்ட மருந்துகளை தெளித்த பிறகே சாகுபடி பணிகளை  தொடங்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனர். தொடர்ந்து களைக்கொல்லி தெளிப்பதால் மண்ணின் வளமும் குறைந்து வருகிறது. இக்களைச்செடி ஒவ்வொரு சீசனிலும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான விதைகளை உருவாக்கும் தன்மையுடையதாகும். 

போதிய ஈரப்பதம் இல்லாமல் மண்ணில் புதைந்தாலும் நீண்ட இடைவெளிக்குப்பிறகும் மீண்டும் முளைக்கும் தன்மையுடையது. 

விளைநிலங்கள் மட்டுமல்லாது சாலையோரங்களிலும் குடியிருப்புகளிலும் இக்களைச்செடியின் பரவல் பல மடங்கு அதிகரித்துள்ளது. 

இச்செடிகளால் மனிதர்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட பிரச்சினைகளும்,கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. 

இப்பிரச்சினைக்கு தீர்வாக ஒருங்கிணைந்த முறையில் பார்த்தீனிய களைச்செடிகளை கட்டுப்படுத்தும் பணிகளை வேளாண்துறை வாயிலாக ஒருங்கிணைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், வேளாண், தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயிகளை ஒருங்கிணைத்து குழு ஏற்படுத்தி பார்த்தீனியம் கட்டுப்படுத்துதலுக்கான விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. 

ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை பாதிக்கும் வகையில் அதிகரித்து வரும் பார்த்தீனியம் பரவல் பிரச்சினை குறித்து மாவட்ட நிர்வாகமும், கவனம் செலுத்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News