உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் அசாம் தொழிலாளர் உதவி மையம் அமைக்க திட்டம்

Published On 2021-12-19 05:56 GMT   |   Update On 2021-12-19 05:56 GMT
பயிற்சி பெற்ற அசாம் தொழிலாளர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
திருப்பூர்:

மத்திய அரசின் தீனதயாளர் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில்  நாடுமுழுவதும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அவ்வகையில் திருப்பூரில் பணிபுரியும் தங்கள் மாநில தொழிலாளர் நிலை குறித்து அசாம் மாநில அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி வருகின்றனர். 

அசாம் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் கிருஷ்ண பாருவா தலைமையில், 5 பேர் குழுவினர் திருப்பூரில் முகாமிட்டுள்ளனர். 

பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சென்று அசாம் தொழிலாளரை சந்தித்து கலந்துரையாடுகின்றனர். சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா, இ.எஸ்.ஐ., - பி.எப்., பிடித்தம் செய்யப்படுகிறதா? ஏதேனும் பிரச்சினைகள் உள்ளனவா என தொழிலாளர்களிடம் விசாரிக்கின்றனர். 

திருப்பூர் காங்கயம் ரோடு, ராக்கியாபாளையம் பிரிவில் இயங்கும் இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் உதவிமையம் இயங்குகிறது. 

இம்மையத்துக்கு சென்ற அசாம் அதிகாரிகள் மைய மேலாளர் ராமசாமியுடன் கலந்துரையாடினர். உதவி மைய செயல்பாடுகள், மையம் மூலம் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தனர். 

அசாம் திறன் மேம்பாட்டு திட்ட இயக்குனர் கிருஷ்ணபாருவா கூறியதாவது:-

டி.டி.யு.ஜி.கே.ஒய்., திட்டத்தில் பயிற்சி பெற்ற அசாம் தொழிலாளர்கள் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். இடம்பெயர்ந்த அசாம் தொழிலாளர் உதவி மையத்தை திருப்பூரில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. கள ஆய்வு விவரங்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உதவி மையம் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News