உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

தி.மு.க. அரசை கண்டித்து உடுமலையில் பா.ஜ.க., ஆர்ப்பாட்டம்

Update: 2021-12-17 09:45 GMT
ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசினார்.
உடுமலை:

தி.மு.க. அரசை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் எதிரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு உடுமலை நகர பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பி.என்.ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

மாவட்ட பொதுச்செயலாளர்கள் யு.கே.பி.என். ஜோதீஸ்வரிகந்தசாமி, எஸ்.எஸ்.குட்டியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேசியதாவது:-

தி.மு.க. தேர்தலில் வெற்றிபெற கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்  மக்களை வஞ்சித்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சி ஊழலற்ற கட்சி என்பதை இந்த தேசம் முழுவதும் அறிந்துள்ளது.

தமிழகத்தில் ஊழலுக்குப் பெயர் போன தி.மு.க. ஆட்சியில் உள்ளது. இந்த நாட்டின் பண்பாட்டை, பாரம்பரியத்தை, நாகரிகத்தை உள்ளடக்கிய சித்தாந்தத்தை பாரதிய ஜனதா கட்சி பின்பற்றி வருகிறது.

சமூக ஆர்வலர்கள் மீது பொய் வழக்குப் போடுவதை மட்டுமே இந்த அரசு வழக்கமாக கொண்டுள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவதாக அறிவித்தனர். காவல்துறையினருக்கு அறிவித்த எதையும் செயல்படுத்த வில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல்  தி.மு.க. அரசு வஞ்சிப்பதாக கோஷங்கள் எழுப்பினர். இதில், மாநில அணி பிரிவு பொறுப்பாளர்கள் மாவட்ட, ஒன்றிய, நகர, மகளிர் அணி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News