உள்ளூர் செய்திகள்
போலீசார் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

பஸ்சில் தொங்கியபடி பயணம்: போலீசார் முன்னிலையில் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி

Published On 2021-12-09 12:25 GMT   |   Update On 2021-12-09 12:25 GMT
பொன்னேரி நோக்கி சென்ற 3 பஸ்களில் படிக்கட்டு மற்றும் ஜன்னல்களில் தொங்கியபடி பயணம் செய்த 35 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பொன்னேரி:

பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிக்கு பஸ்களில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பாட்டு பாடியும் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இதையடுத்து பஸ், ரெயில்களில் சாகசபயணம் செய்யும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.மேலும் பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்கள் பயணம் செய்யும் நேரத்தில் போலீசார் கண்காணிக்கும் படியும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தச்சூர் கூட்டுச்சாலையில் இருந்து பொன்னேரி நோக்கி சென்ற 3 பஸ்களில் படிக்கட்டு மற்றும் ஜன்னல்களில் தொங்கியபடி பயணம் செய்த 35 மாணவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை தனியாக அழைத்து வந்து பொன்னேரி டி. எஸ் .பி. குணசேகரன் மற்றும் போலீசார் அறிவுரை வழங்கினர். இதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் பஸ்களில் ஒழுக்கத்தோடு பயணிப்போம், சட்டத்திற்கு புறம்பான எந்த செயல்களிலும் ஈடுபட மாட்டோம் ஒழுக்கமான பிள்ளைகளாக எங்களை வளர்த்து கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.

பஸ்களில் சாகசத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதித்தனர். இனிவரும் காலங்களில் பஸ்களில் தொங்கியபடி பயணம் செய்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். அப் போது பொன்னேரி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம் ராஜ், போக்குவரத்து இன்ஸ் பெக்டர் ராஜேஷ் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News