உள்ளூர் செய்திகள்
தேயிலை தோட்டத்தில் மயங்கி விழுந்த குட்டியானை உயிரிழப்பு

வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் மயங்கி விழுந்த குட்டியானை உயிரிழப்பு

Published On 2021-12-08 04:29 GMT   |   Update On 2021-12-08 04:29 GMT
வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் மயங்கி விழுந்த குட்டியானை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

வால்பாறை:

கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் கடந்த 2 மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த யானைகள் அங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்களில் சுற்றி திரிந்து வருகின்றன. அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் நுழைந்து வீடுகள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தி வருகிறது.

குறிப்பாக முடீஸ் எஸ்டேட் பகுதியில் எப்போதுமே யானைகள் கூட்டம், கூட்டமாக சுற்றி திரிகின்றன. இதனால் அப்பகுதியில் வசிக்க கூடிய தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேயிலை தோட்டங்களுக்கு பணிக்கு மிகுந்த அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் யானை கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு குட்டி யானை முடீஸ் எஸ்டேட்டை அடுத்த முத்துமுடி எஸ்டேட் 3-வது டிவி‌ஷன் பகுதியில் கடந்த 2 நாட்களாக தனியாக நடமாடி கொண்டிருந்தது.

நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் வழக்கம் போல் தங்கள் பணிக்கு சென்றனர். அப்போது அங்குள்ள தேயிலை செடிகளுக்கு மத்தியில் குட்டி யானை மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த மானாம்பள்ளி வனசரக அலுவலர் மணிகண்டன் தலைமையிலா வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் யானையை பார்வையிட்டனர்.

அப்போது குட்டி யானை மயங்கி கிடந்தது. உடனடியாக கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் உதவியுடன் குட்டியானைக்கு அங்கு வைத்தே சிகிச்சை அளிக்கப்பட்டது.

தொடர்ந்து இன்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அனைத்தும் முடிந்ததும் குட்டியானையை மீட்டு வனத்திற்குள் உள்ள யானை கூட்டத்தில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

இந்த நிலையில் குட்டியானை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டது. இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் குழுவினர் குட்டி யானையின் உடலை உடற்கூராய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடற்கூராய்வு செய்த பின்னரே குட்டியானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். 

Tags:    

Similar News