உள்ளூர் செய்திகள்
தேர்வான மாணவர்கள்.

மாநில மிக இளையோர் கபடி அணி- திருப்பூரில் இருந்து 3 மாணவர்கள் தேர்வு

Published On 2021-12-06 08:02 GMT   |   Update On 2021-12-06 08:04 GMT
தமிழகம் முழுவதும் இருந்து 38 மாவட்டங்களை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
திருப்பூர்:

மாநில மிக இளையோர் கபடி அணிக்கு திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரு மாணவர், 2 மாணவிகள்  தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து  திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் செயலாளர்ஜெயசித்ரா சண்முகம்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

மாநில அமெச்சூர்கபடி கழகத்தின் சார்பில் சேலம் மாவட்டம், தாழையூர் சுவாமி அகாடமியில் மாநில மிக இளையோர் கபடி அணிக்கான சிறுவர், சிறுமிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 38 மாவட்டங்களை சேர்ந்த 500 மாணவ, மாணவிகள்  பங்கேற்றனர்.

இதில்  திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 14 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இத்தேர்வில் மிக இளையோருக்கான சிறுவர் பிரிவில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் நிஷாந்த், சிறுமிகள் பிரிவில் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜோதிலட்சுமி, உடுமலை பள்ளியை  சேர்ந்த காவியாஸ்ரீ என்ற மாணவியும் மாநில மிக இளையோர் கபடி அணிக்கு  தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு தாழையூரில் உள்ள சுவாமி அகாடமியிலும், வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள ஆக்சிலியம் மகளிர் கல்லூரியிலும் பயிற்சி முகாம்கள் நடைபெறுகின்றன. 

இதைத்தொடர்ந்து உத்தரகண்ட் மாநிலத்தில் வருகிற 28 முதல் 31-ந் தேதி வரையில் நடைபெறும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு தமிழக அமெச்சூர்கபடி கழகத்தின் சார்பில் 3 பேரும்  அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News