செய்திகள்
துண்டிக்கப்பட்ட பாலத்தில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்ட காட்சி

கனமழையால் சாலை துண்டிப்பு - பாலத்தில் அமர்ந்து பொதுமக்கள் மறியல்

Published On 2021-11-18 10:50 GMT   |   Update On 2021-11-18 10:50 GMT
கனமழையால் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் அமர்ந்து ரெட்டியார்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமானோர் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

நெல்லை:

நெல்லையில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளும் பாதிக்கப்பட்டு காணப்படுகிறது.

பாளை என்.ஜி.ஓ. காலனி குளக்கரையில் இருந்து ரெட்டியார்பட்டி ஆவின் பால்பண்ணை செல்லும் வழியில் ஒரு பாலம் உள்ளது. நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக அங்குள்ள குளம் நிரம்பி பாலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் அந்தபாலத்தில் உடைப்பு ஏற்பட்டு 4 சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் உடைப்பு ஏற்பட்ட பாலத்தில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக பாலம் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போல் கனமழைக்கு தெற்கு புறவழிச்சாலை சிக்னல் அருகே உள்ள மின்மாற்றி முழுவதும் நேற்றிரவு தண்ணீரில் மூழ்கியது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

உடனடியாக நெல்லை மேற்பார்வை பொறியாளர் செல்வராஜ், செயற்பொறியாளர் முத்துக்குட்டி ஆகியோர் விரைந்து சென்று வேறுபகுதிகளில் இருந்து இணைப்பு வழங்கி மின்சாரம் வழங்கினர்.

இன்று காலை அந்த மின்மாற்றி சரி செய்யும் பணி நடந்து வருகிறது. 


Tags:    

Similar News