செய்திகள்
நல்லசாமி.

எண்ணை, பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும்-அவிநாசியில் நல்லசாமி பேட்டி

Published On 2021-11-08 08:25 GMT   |   Update On 2021-11-08 08:25 GMT
அரசு கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.
அவிநாசி:

எண்ணை-பருப்பு உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் நல்லசாமி வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் அவினாசியில் நிருபர்களிடம்  கூறியதாவது:-

விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை. வெளிநாடுகளில் இருந்து  70 சதவீதம் எண்ணெய், 50 சதவீதம் பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. அவற்றுக்கு மானியம் வழங்குவதால் விவசாயிகளுக்கு பயன் இல்லை.

நம் நாட்டில் எண்ணெய், பருப்பு உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். அதற்கு  மானியம் தர வேண்டும். அவற்றை ரேஷன் கடைகளில் விற்க வேண்டும்.

இறக்குமதி கொள்கையை மாற்றாத வரை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயராது.பிற உரங்களின் விலை 50 கிலோவுக்கு ரூ.1,000  வரை உள்ள நிலையில், யூரியா ரூ.300க்கு விற்கிறது.

விவசாயிகள் யூரியாவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதனால்  விளைச்சல் அதிகரிக்காது.  பயிரில் நோய் தாக்குதல் ஏற்படும். இந்த விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அரசு கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் நடப்பதில்லை. லஞ்சம் கொடுக்காமல் நெல் விற்கும் விவசாயிக்கு பாராட்டு விழா நடத்த தயாராக உள்ளோம்.

கலப்படம் இல்லாத உணவு பொருட்களை வழங்கும் போது நோய் பரவல் குறையும். அதன் மூலம் மருத்துவர் தேவை குறையும். இதன் மூலம் ‘நீட்’ தேர்வு அவசியமில்லாததாகிவிடும் என்றார்.
Tags:    

Similar News