செய்திகள்
கோயம்பேடு பஸ் நிலையம்

தீபாவளி பண்டிகைக்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 சிறப்பு கவுண்டர்களில் முன்பதிவு

Published On 2021-10-30 09:48 GMT   |   Update On 2021-10-30 09:48 GMT
சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்ல இதுவரையில் 48 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசு பஸ்களில் முன்பதிவு விறுவிறுப்பு அடைந்துள்ளது.

சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணம் செய்ய வசதியாக 16,500 சிறப்பு பஸ்கள் தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படுகின்றன.

நாளை மறுநாள் 1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

நீண்ட தூரம் செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது. ஆரம்பத்தில் முன்பதிவு சுணக்கமாக இருந்தது. தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதுவரையில் 48 ஆயிரம் பேர் சென்னையில் இருந்தும் பிற நகரங்களில் இருந்தும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அரசு விரைவு பஸ்களில் 90 சதவீதம் முன்பதிவு முடிந்து விட்டது.

இதையடுத்து மற்ற அரசு போக்குவரத்து கழக பஸ்களில் தற்போது முன் பதிவு நடக்கிறது. ஆன்லைன் வழியாகவும், செல்போன் செயலி மூலமாகவும் பெரும்பாலானவர்கள் முன்பதிவு செய்து வருகிறார்கள்.

பொதுமக்கள் நேரடியாக டிக்கெட் எடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் கோயம்பேடு பஸ் நிலையத்தில் 10 சிறப்பு கவுண்டர்கள் செயல்படுகிறது.

இதே போல தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களில் தீபாவளி சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து போக்குவரத்து கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தீபாவளி முன்பதிவு நாளை முதல் மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கிறோம். அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால் மற்ற போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

இதுவரையில் 1000 பஸ்களுக்கு முன்பதிவு நடந்துள்ளது. பஸ்களின் இருக்கைகள் நிரம்ப நிரம்ப முன்பதிவிற்கான இடங்கள் சேர்க்கப்படும். தற்போது கூடுதலாக 100 பஸ்கள் முன்பதிவு செய்வதற்கு சேர்க்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் முன்பதிவு காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் நேரடியாக சென்று சிறப்பு பஸ்களுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News