செய்திகள்
யானை இடித்து தள்ளியதில் முதலைப்பண்ணை சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதை படத்தில் காணலாம்.

உடுமலை குடியிருப்பு பகுதியில் ஒற்றை யானை சுற்றி வருவதால் பொதுமக்கள் அச்சம் - முதலைப்பண்ணை சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது

Update: 2021-10-23 09:40 GMT
கடந்த சில நாட்களாக ஒரு ஆண் யானை இரவு நேரங்களில் சுற்றி வருகிறது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை அருகே அமராவதி வனச்சரக பகுதியில், முதலைப் பண்ணை அமைந்துள்ளது. 

இப்பகுதியில் வன மரபியல் பிரிவு மூங்கில்பண்ணை, நாற்றுப்பண்ணை, எக்கோ ஷாப், கரட்டுப்பதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு மற்றும் அணையில் மீன் பிடிக்கும் மீனவர் குடியிருப்பு ஆகியவை உள்ளன.

இப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு ஆண் யானை இரவு நேரங்களில் சுற்றி வருகிறது. மேலும் மூங்கில் மரங்களை உண்டதோடு அங்குள்ள முதலைப் பண்ணையின் காம்பவுண்ட் சுவரில் மோதி சேதப்படுத்தி உள்ளது. இதில் 4 மீட்டர் தூரத்திற்கு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

இதுகுறித்து வனத்துறை யினர் கூறுகையில்:

வனப்பகுதியில் ஒற்றை யானை சுற்றி வருகிறது. கடந்த ஆண்டும் இதே போல் வந்து மூங்கில் பண்ணையில் புகுந்து மரங்களை ஒடித்ததோடு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது. தற்போதும் நடமாட்டம் உள்ளது. 

எனவே சேதம் ஏற்படுவதை தடுக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்களை கொண்ட குழு அமைத்து தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் என்றனர். 
Tags:    

Similar News