செய்திகள்
நீர்மட்டம் உயர்ந்து காணப்படும் அமராவதி அணை.

தொடர் மழையால்அமராவதி அணை நீர்மட்டம் 2 நாளில் 3அடி உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2021-10-23 07:12 GMT   |   Update On 2021-10-23 07:12 GMT
அணையில் இருந்து ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் 10 அடி வரை குறைந்தது.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. தென்மேற்கு பருவ மழையால் ஜூலை 23 - ந்தேதி மாலை அணை நிரம்பியது. தொடர்ந்து 3 மாதமாக அணை நிரம்பிய நிலையில் காணப்பட்டது. அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.

வழக்கமாக ஜூன் மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில்  நடப்பாண்டு அணை கட்டப்பட்டு 64 ஆண்டுகளில் முதல் முறையாக மே மாதம் 16 - ந்தேதி ராஜவாய்க்கால் பாசனத்திற்கும், செப்டம்பர் 21 - ந்தேதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டதால் அணை நீர்மட்டம் 10 அடி வரை குறைந்தது.

இந்நிலையில் அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள தலை யாறு, மூணாறு, மறையூர், கோவில்கடவு மற்றும் வால்பாறை மலைத் தொடரின் கிழக்கு பகுதி, கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

இதனால் அணைக்கு நீர் வரும்  பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் வனப்பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது .தற்போதைய நிலவரப்படி 90அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 80.65 அடியாகவும், நீர் இருப்பு மொத்தமுள்ள, 4,047 மில்லியன் கன அடியில் 3,229.71 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. 

நீர் வரத்து வினாடிக்கு, 1,639 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து ஆற்றில் வினாடிக்கு 575 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2 நாட்களில் அமராவதி அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது. 

திருமூர்த்தி அணை, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் திருமூர்த்தி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.   
Tags:    

Similar News