செய்திகள்
மாநகர பஸ்களில் பெண்கள் இலவச பயணம்

சென்னையில் மாநகர பஸ்களில் தினமும் 7.5 லட்சம் பெண்கள் இலவச பயணம்

Published On 2021-10-19 09:11 GMT   |   Update On 2021-10-19 10:23 GMT
வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேரும், ஒருசில நாட்களில் 8 லட்சம் பேரும் பயணிக்கிறார்கள். இலவச பயணத்திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
சென்னை:

அரசு மாநகர பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசு அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள மாநகர பேருந்துகளில் (சாதாரண பஸ்) இலவசமாக பெண்கள் பயணம் செய்து வருகிறார்கள்.

சென்னையில் ஆரம்பத்தில் 4, 5 லட்சம் பெண்கள் தினமும் இலவசமாக பயணம் செய்தனர். இலவச பயணத்திற்கு பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.

கூலி வேலைகளுக்கு செல்லக்கூடியவர்கள் மட்டுமின்றி அலுவலகங்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய பெண்களும் அதிகளவு இந்த சலுகையை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த பெண்கள் மாநகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்வது படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினமும் 7.5 லட்சம் பெண்கள் இலவசமாக பயணம் செய்கிறார்கள்.

இதுகுறித்து மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது:-

மாநகர போக்குவரத்து கழகத்தில் 3,233 பஸ்கள் உள்ளன. இதில் தற்போது 2,900 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தொற்று பரவல் குறைந்ததைத் தொடர்ந்து பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஆனாலும் கொரோனா முந்தைய கால அளவை இன்னும் எட்ட முடியவில்லை. கொரோனாவுக்கு முன்பு வரை தினமும் 32 லட்சம் பேர் மாநகர பஸ்களில் பயணம் செய்தார்கள். ஆனால் தற்போது 18 லட்சம் பேர் மட்டுமே பயணிக்கிறார்கள்.



பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டால் இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்று எதிர்பார்க்கிறோம். 140 மினி பஸ்கள் உள்ளதில் இதுவரை 110 பஸ்கள் படிப்படியாக இயக்கப்பட்டன.

இதேபோல 48 ஏ.சி. பஸ்கள் உள்ள நிலையில் அதில் 24 பஸ்கள் தற்போது இயக்கப்படுகிறது. மாநகர பஸ்களில் பெண்கள் அதிகளவு பயணம் செய்து வருகிறார்கள்.

வார நாட்களில் சராசரியாக தினமும் 7.5 லட்சம் பேரும், ஒருசில நாட்களில் 8 லட்சம் பேரும் பயணிக்கிறார்கள். இலவச பயணத்திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதற்கான செலவினத்தை அரசு பொறுப்பேற்று கொண்டு அத்தொகையை மாதந்தோறும் போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறது. இதனால் போக்குவரத்து கழகங்களை பொறுத்தவரையில் இத்திட்டத்தால் நஷ்டமில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News