செய்திகள்
கைது

கோவையில் பஸ்சில் பயணிகளிடம் பணம் திருடிய 2 இளம்பெண்கள் கைது

Published On 2021-10-16 13:56 GMT   |   Update On 2021-10-16 13:56 GMT
கோவையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பஸ்சில் பயணிகளிடம் பணம் திருடிய 2 இளம்பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 4-ந் தேதி கொண்டாடப்படுகிறது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடுவதற்காக மதுரை, நீலகிரி திண்டுக்கல் உள்பட பல இடங்களில் இருந்து கோவைக்கு வந்துள்ளனர். இந்த கும்பலை பிடிக்க கோவை ஆர்.எஸ்.புரம் உதவி கமி‌ஷனர் மணிகண்டன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டு உமா, கார்த்திக் பூபதி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

தனிப்படையினர் மாறுவேடத்தில் டவுன் ஹால் அருகே உள்ள பிரகாசம் பஸ் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த பஸ்சில் இருந்து இறங்கிய பெண்ணின் மீது சந்தேகம் அடைந்து அவரை விசாரிக்க சென்றனர். அவர் போலீசாரை பார்த்ததும் கைப்பையை கீழே போட்டு விட்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை விரட்டி சென்று பிடித்து விசாரித்தனர். பையை எடுத்து பார்த்தபோது அதில் ரூ.20 ஆயிரம் இருந்தது.

விசாரணையில் அவர் மதுரையை சேர்ந்த பார்வதி(33) என்பதும், தற்போது கோவையில் தங்கி திருட்டு தொழிலில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

இவர் வெள்ளலூரில் இருந்து காந்திபுரம் சென்ற பஸ்சில் இருந்த பெண்ணிடம் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று தனிப்படை போலீசார் பூ மார்க்கெட்டில் இருந்து காந்தி பார்க் செல்லும் பஸ்சில் ஏறி சோதனை மேற்கொண்டனர். பஸ் பூ மார்க்கெட் அருகே சென்றபோது இளம்பெண் ஒருவர் இருக்கையில் இருந்த ஒரு பெண்ணிடம் இருந்து பணப்பையை நைசாக எடுத்தார். இதை பார்த்த போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து விசாரித்தனர்.அதில், அவர் மதுக்கரை அருகே உள்ள சுந்தராபுரத்தை சேர்ந்த முத்தம்மா (24) என்பதும் கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்சில் சென்று பணம் திருடி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் முத்தம்மாளை கைது செய்தனர். அந்த பெண்ணிடம் திருடிய பணப்பையில் ரூ.1000 இருந்தது. அந்த பணத்தை போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர்.சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார் இதுவரை தீபாவளி வேட்டையில் திருட்டில் ஈடுபட்ட 4 இளம்பெண்களை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News