செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

Published On 2021-10-07 08:20 GMT   |   Update On 2021-10-07 08:20 GMT
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் மற்றும் தமிழக-கர்நாடக எல்லைகளில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் நேற்று மாலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 13 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஒகேனக்கல் காவிரி ஆற்று நீருடன் மழைநீரும் சேர்ந்து கரைபுரண்டு ஓடியது. ஒகேனக்கல்லில் உள்ள மெயின்அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் அருவி உள்ளிட்ட அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

மேலும் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கிளை ஆறான சின்னாற்றில் கரையோர பகுதிகளான கோவில் பள்ளம், யானைக்கால் மடுவு, முத்தூர்மலை, கெம்பாகரை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் தொடர்ந்து மூன்றாவது நாளாக சின்னாற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது.

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News