செய்திகள்
சிபா ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

சி.பா.ஆதித்தனாருக்கு தலைவர்கள் புகழாரம்

Published On 2021-09-27 06:10 GMT   |   Update On 2021-09-27 08:34 GMT
பாமரர்களையும் நாளிதழ் படிக்கச்செய்து உலக நடப்புகளை அறியச் செய்த பெருமை சி.பா.ஆதித்தனாரையே சாரும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை:

சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்:-

சபாநாயகராக இருந்து சபையில் தமிழை ஒலிக்கச்செய்த அய்யா சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளான இன்று அவரது நினைவை போற்றி வணங்குகிறேன். சகலமானவர்களுக்கும் சமமாக தமிழ் செய்திகளை எளியவருக்கும் எளிய பதிப்பாக சென்றடைய செய்து செய்தியை பாமர மக்களும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு சரித்திரம் படைத்தவர். எளிய செய்தி ஊடகத்திற்கு நாட்டில் மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக திகழ்ந்தவர். அவர் வழியில் இன்று செய்தி ஊடகமாக மட்டுமல்லாமல் ஒளி ஊடகமாகவும் அவரது முயற்சி இன்று வெற்றிகரமாக பரிமளித்துகொண்டிருப்பது மகிழ்ச்சி. தமிழுக்கு தொண்டாற்றுவதே நாம் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாகும்.



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

தமிழர் தந்தை என்று போற்றப்படும் சி.பா. ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளில் அவரை வணங்குவோம். அவர் இல்லாமல் தமிழ்நாட்டு இதழியல் இல்லை. தமிழர்களுக்கான உரிமைகள் இல்லை. பாமரர்களையும் நாளிதழ் படிக்கச் செய்து உலக நடப்புகளை அறியச் செய்த பெருமை அவரையே சாரும்.

பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி:

தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் போற்றும் சாதனைகளுக்கு சொந்தக்காரரான அவரை நாமும் போற்றுவோம். இதழியல் துறையில் அவர் படைத்த சாதனைகள் இனிவரும் பல தலைமுறைகளுக்கு பாடமாக விளங்கும்.

அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் :-

“பத்திரிகை உலகின் பிதாமகன்” சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்த நாளில் வணங்குகிறது தமிழ் கூறும் நல்லுகம். கை நாட்டு மனிதனுக்கும், கடைக்கோடி மக்களுக்கும் எளிய தமிழைக் கொண்டு சென்ற சி.பா.ஆதித்தனாரை வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Tags:    

Similar News