செய்திகள்
திருப்பூர் போயம்பாளையம் சாலையில் குளம் போல் தேங்கிய மழைநீர்.

1மணி நேரம் கொட்டி தீர்த்தது - திருப்பூரில் 18 செ.மீ.,மழை பதிவு

Published On 2021-09-24 08:07 GMT   |   Update On 2021-09-24 08:07 GMT
திருப்பூர் ‘சிட்கோ’ வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால், ‘நிட்டிங்’ நிறுவனங்களில் எந்திரங்களும், பனியன் துணியும் பலத்த சேதமாகின.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அவிநாசி வேட்டுவபாளையம் ஊராட்சிக்குட்பட்ட அசநல்லிபாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. இதனால் ரூ.7 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் ‘சிட்கோ’ வளாகத்திற்குள் மழைநீர் புகுந்ததால், ‘நிட்டிங்’ நிறுவனங்களில் எந்திரங்களும், பனியன் துணியும் பலத்த சேதமாகின. திருப்பூர் காளிபாளையம் ஊராட்சி வாரணாசிபாளையத்தில், தென்னை மரத்தில் இடி விழுந்ததால் மரம் தீப்பற்றி எரிந்தது. 

திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய மரம் வேரோடு சாய்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் மீது விழுந்தது. இதில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 

திருப்பூர் கலெக்டர் அலுவலக முகாம் அலுவலக பகுதியில் 176 மி.மீ., மழை  பெய்தது. திருப்பூர் வடக்கு பகுதியில் 65 மி.மீ., அவினாசியில் 18மி.மீ., திருப்பூர் தெற்கு பகுதியில் 10மி.மீ., மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதன் மூலம் 18செ.மீ., மழை பதிவாகியுள்ளது.   
Tags:    

Similar News