செய்திகள்
பிரியாணி

இறந்த கோழிகளின் இறைச்சியை சமைத்து விற்பனை? பிரியாணி கடைகளில் ஆய்வு செய்யப்படுமா?

Published On 2021-09-19 08:41 GMT   |   Update On 2021-09-19 08:41 GMT
கோழிகள் உடல்நலக்குறைவால் தினசரி சிறிய பண்ணைகளில் 10 முதல் 20 வரையும் ,பெரிய பண்ணைகளில் நூற்றுக்கணக்கில் இறந்து விடுகின்றன.
தாராபுரம்:

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவு வகையில் முதலிடம் பிடித்திருப்பது பிரியாணி மட்டுமே. இதையடுத்து பல இடங்களில் முக்குக்கு முக்கு பிரியாணி கடைகள் முளைத்துள்ளன.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலும் புற்றீசல் போல மலிவு விலை பிரியாணி கடைகள்  உருவாகியுள்ளன. இங்கு ரூ.40 மற்றும் 50க்கு அரை பிளேட் பிரியாணி வழங்கப்படுகிறது.

தாராபுரம் அருகில் உள்ள கோவிந்தபுரம், மேட்டுக்கடை, புத்தரச்சல் ,கரையூர், குண்டடம், நந்தவனம்பாளையம் , பல்லடம் ஆகிய பகுதிகளில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன.

இங்கு சிறிய பண்ணைகளில் 5000 கோழிகளும், பெரிய பண்ணைகளில் முட்டை கோழி, கறிக்கோழி என 2 லட்சம் கோழிகள் வரை மிகப்பெரிய செட்டுகள் அமைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. அவை தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இங்கு வளர்க்கப்படும் கோழிகள் உடல்நலக்குறைவால் தினசரி சிறிய பண்ணைகளில் 10 முதல் 20 வரையும் ,பெரிய பண்ணைகளில் நூற்றுக்கணக்கில் இறந்து விடுகின்றன. வேன்களில் அடைத்து செல்லும் போது 500க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்து விடுகின்றன. இந்த கோழிகளை சுகாதார துறையினர் குழிதோண்டி புதைக்கும்படி கூறியுள்ளனர்.

ஆனால் பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலர் இறந்த  கோழிகளை வெளியில் வியாபாரிகளுக்கு விற்பனை செய்கின்றனர். அதனை வாங்குவதற்கு என்றே வியாபாரிகள் உள்ளனர்.

அவர்கள் இரண்டு கிலோ அளவுள்ள இறந்த கோழியை ரூ.20க்கு பெற்று தள்ளுவண்டி கடைகள் மற்றும் மலிவு விலை பிரியாணி கடைகளுக்கும்,  சில்லிசிக்கன் கடைகள், சூப்கடைகள் ஆகியவற்றிற்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. அதனை உண்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே சுகாதாரத்துறை அதிகாரிகள் தாராபுரத்தில் உள்ள பிரியாணி கடைகளில் ஆய்வு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News