செய்திகள்
சூரியகாந்தி.

வெள்ளகோவில், மூலனூரில் சூரியகாந்தி விதை - பருத்தி ஏலம்

Published On 2021-09-18 08:11 GMT   |   Update On 2021-09-18 08:11 GMT
ஈரோடு, பூனாட்சி, காரமடை, காங்கயம், முத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 8 வணிகர்கள் சூரியகாந்தி விதை வாங்குவதற்காக வந்திருந்தனர்.
வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் ரூ.52.58 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கு கரியாம்பட்டி, கொத்தயம், குப்பணவலசு, வாகரை, வடபருத்தியூர், லக்கமநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து 134 விவசாயிகள் 1,897 மூட்டைகளில் 93,113 கிலோ சூரியகாந்தி விதைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். 

ஈரோடு, பூனாட்சி, காரமடை, காங்கயம், முத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 8 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர். கிலோ ரூ.51 முதல் ரூ.61.16 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ.56.30. மொத்தம் ரூ.52 லட்சத்து 58 ஆயிரத்து 983க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர்மாரியப்பன் தெரிவித்தார். 

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் கடந்த வாரத்தை விட பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ.200 உயர்ந்தது.
ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 320 விவசாயிகள் 3,197 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்த வரத்து 1,035 குவிண்டால். திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 15 வணிகர்கள் இவற்றை கொள்முதல் செய்ய வந்திருந்தனர்.  

குவிண்டால் ரூ.6,900 முதல் ரூ.8,575 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,550 ஆகும். மொத்தம் ரூ. 76 லட்சத்து 65 ஆயிரத்து 590க்கு விற்பனை நடைபெற்றது. கடந்த வாரத்தை விட 100 குவிண்டால் வரத்து குறைந்த நிலையில் விலை ரூ.200 அதிகரித்து விற்பனையானது. 

ஏல ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக் குழு முதுநிலை செயலாளர்  பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News