செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் வனக்கல்லூரி மாணவர்கள் 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கல்லூரி மூடப்பட்ட பிறகும் 5-வது நாளாக போராட்டத்தை தொடரும் வனக்கல்லூரி மாணவர்கள்

Published On 2021-09-12 17:28 GMT   |   Update On 2021-09-12 17:28 GMT
மாணவர்கள் தொடர் போராட்டத்தை அடுத்து பட்டுப்புழுவியல் துறை மட்டும் காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

மேட்டுப்பாளையம்:

கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரியில் பட்டுப்புழுவியல் துறை உள்ளது. இங்கு மொத்தம் 80 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் பட்டுப்புழுவியல் துறைக்கு மாணவர்கள் சேர்க்கப்படவில்லை. இதை கேள்விப்பட்ட பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள், மீண்டும் மாணவர் சேர்க்கை நடத்தகோரி கடந்த 7-ந் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கே செல்லாமல் மாணவ, மாணவிகள் இரவு, பகல் என தொடர்ந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இந்த போராட்டம் 4-வது நாளாக நேற்றும் நீடித்தது.

இந்த நிலையில் மாணவர்கள் தொடர் போராட்டத்தை அடுத்து பட்டுப்புழுவியல் துறை மட்டும் காலவரையின்றி மூடப்படுவதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்தது. மேலும் மாணவர்கள் உடனடியாக விடுதிகளை காலி செய்து தங்கள் வீடுகளுக்கு செல்லுமாறு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியது.

ஆனால் மாணவர்கள் விடுதியில் உள்ள தங்கள் உடைமைகளை எடுத்து கொண்டு வந்து, மீண்டும் கல்லூரி வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், தாசில்தார் ‌ஷர்மிளா மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனாலும் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிந்தது. அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மாணவர்களிடம், நீங்கள் உங்களது கோரிக்கைகளை கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்து கொள்ளுங்கள் என்றார்.

இதையடுத்து மாணவ, மாணவிகள் இன்று 5-வது நாளாக தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களில் 8 பேர் மட்டும் இன்று மாவட்ட கலெக்டர் சமீரனை சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளிக்க உள்ளனர். மற்ற மாணவர்கள் தொடர்ந்து கல்லூரி வளாகத்திலேயே உடைமைகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

Tags:    

Similar News