செய்திகள்
பஸ் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வழங்கிய காட்சி.

கொரோனா தடுப்பூசி முகாம்-வீடு, வீடாக பிரசுரங்கள் வழங்கி மாநகராட்சி கமிஷனர் விழிப்புணர்வு

Published On 2021-09-11 08:50 GMT   |   Update On 2021-09-11 08:50 GMT
மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 ஆக உள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களை கொரோனா நோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தமிழக முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின் படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் நாளை 12 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது. 

மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 77 ஆயிரத்து 95 ஆக உள்ளது. இவர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி தொற்று நோயில் இருந்து பாதுகாக்க முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. 

இதில் ஒரு பகுதியாக நடைபெறும் சிறப்பு தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளி கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், டோல்கேட் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மருந்து இலவசமாக போட்டு கொள்ளலாம். 

மாநகராட்சி பகுதிகளில் 138 இடங்களில் 45 ஆயிரம் பேருக்கு 700 மருத்துவர்கள், அலுவலர்கள், பணியாளர்கள், உதவி யாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தடுப்பூசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சியின் 4 மண்டலங்களிலும் தடுப்பூசி மற்றும் தடுப்பூசி முகாம் தொடர்பான விபரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் மூலம் துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியும், ஆட்டோக்கள் மூலம் முகாம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியும் நடந்து வருகிறது. 

மேலும் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் இன்று மாநகராட்சிக்குட்பட்ட பழைய பஸ் நிலையம், கருவம்பாளையம், ராஜவீதி, புதிய பஸ் நிலையம், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்றும், காய்கறி, டீக்கடை, வியாபாரிகள், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தினார்.

நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News