செய்திகள்
கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கியபோது எடுத்தபடம்.

கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு - கலெக்டர் வழங்கினார்

Published On 2021-09-09 11:17 GMT   |   Update On 2021-09-09 11:17 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசு வழங்கினார்.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி பல்வேறு துறைகளின் மூலம் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

அந்த வகையில் ஆகஸ்டு 5 மற்றும் 6-ந் தேதிகளில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணையதளம் வழியாக சுவரொட்டி வடிவமைப்பு, ஓவியப்போட்டி, முழக்கத்தொடர், வினாடி வினா, நகைப்படம் உருவாக்கம், நகைச்சுவை, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் 4,230 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலமாக கலந்து கொண்டனர்.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. இதில் பல்வேறு போட்டிகளில் முதல் 3 இடங்களை பெற்ற 58 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு கேடயங்களை கலெக்டர் ஸ்ரேயாசிங் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, துணை இயக்குனர் (சுகாதாரம்) பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரிய-ஆசிரியைகள் மாணவ, மாணவிகள், பெற்றோர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News