செய்திகள்
ஜெயில் தண்டனை

சிறுமியை கர்ப்பமாக்கிய கோவை வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2021-08-27 09:19 GMT   |   Update On 2021-08-27 09:19 GMT
திருமணம் செய்வதாக கூறி சிறுமியை கர்ப்பமாக்கிய கோவை வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
கோவை:

கோவை கே.கே.புதூரை சேர்ந்தவர் பாலா என்ற பால சுப்பிரமணியம்(வயது21). இவரும் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியும் காதலித்து வந்தனர். காதலர்கள் 2 பேரும் பல இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர்.

அப்போது பாலசுப்பிரமணியம் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்தார். தொடர்ந்து இதுபோன்று கூறியே பல முறை சிறுமியை அவர் பலாத்காரம் செய்துள்ளார். அவர் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் சிறுமி தனக்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மாணவி திடீரென உடல்நலத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது, சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் மத்திய அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியத்தை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இது தொடர்பாக கோவை நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கடந்த 2018-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்து போக்சோ கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த போக்சோ கோர்ட்டு(பொறுப்பு) நீதிபதி ரவி, பாலசுப்பிரமணியத்திற்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News