செய்திகள்
கோப்புப்படம்

அன்னூர் தாலுகாவில் 19-ந்தேதி கடை அடைப்பு போராட்டம்: விவசாயிகள் சங்கத்தினர் அறிவிப்பு

Published On 2021-08-15 05:05 GMT   |   Update On 2021-08-15 05:05 GMT
விவசாயி கோபால்சாமி மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஒட்டர்பாளையம் கோபிராசிபுரத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
கோவை:

கோவை மாவட்டம் அன்னூர் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயி கோபால்சாமி நிலஅளவை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கச் சென்றார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கோபாலின் காலில் விழுந்து கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி, மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். விசாரணைக்கு பின்னர் விவசாயி கோபால்சாமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம், அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்தநிலையில் திடீர் திருப்பமாக விவசாயி கோபால்சாமியை கிராம நிர்வாக உதவியாளர் முத்துசாமி தாக்கும் வீடியோ வெளியானது. இந்த வீடியோ விவகாரம் கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்பேரில் ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அதிகாரி கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து விவசாயி கோபால்சாமி மீது வழக்கு தொடரப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் ஒட்டர்பாளையம் கோபிராசிபுரத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் விவசாயி கோபால்சாமி மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், முத்துசாமி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோரை நிரந்தரமாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்கள் முன்பும் வருகிற 17-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, 19-ந் தேதி அன்னூர் தாலுகா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
Tags:    

Similar News