செய்திகள்
பழனி அடிவாரத்தில் வழிபட்ட பக்தர்கள்

கொரோனா பரவலால் தடை - பழனி அடிவாரத்தில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்

Published On 2021-08-08 08:49 GMT   |   Update On 2021-08-08 08:49 GMT
கொரோனா பரவலை தடுக்க 3 நாட்கள் தடையால், பழனி முருகன் கோவிலில் அடிவார பகுதியில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர். மேலும் வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பழனி:

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, உண்டியல் காணிக்கை உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை செலுத்திவிட்டு செல்கின்றனர். இதில், வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் பக்தர்கள் வருவதால் தரிசன வழிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெரிசலான பகுதிகளில் மக்கள் கூட அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2-ந்தேதி ஆடி கிருத்திகை நாளன்று கோவில்களில் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் பழனி முருகன் கோவில் உள்பட பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் கோவிலின் வாசலில் நின்றபடி வழிபட்டு சென்றனர்.

இந்நிலையில் நேற்றுமுதல் 3 நாட்கள் (வெள்ளி, சனி, ஞாயிறு) அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக பழனியில் முருகன் கோவில், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஆடி அமாவாசையை முன்னிட்டு வெளியூரில் இருந்து இன்று அதிகாலையிலேயே பழனிக்கு வந்த பக்தர்கள் கோவில் நுழைவு பகுதியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டனர். அறை எடுத்து தங்கியிருந்த பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். எனவே அவர்கள் அடிவாரம் பாதவிநாயகர் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியும், தேங்காய் உடைத்தும் வழிபட்டனர். 

Tags:    

Similar News