செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் மூத்த குடிமக்களுக்காக முதல் ஆன்லைன் ரேடியோ

Published On 2021-08-03 05:51 GMT   |   Update On 2021-08-03 05:51 GMT
மத்திய சமூக மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது 10 சமூக வானொலி நிலையங்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
சென்னை:

உலக மூத்த குடிமக்கள் தினத்தையொட்டி சென்னையில் முதியோர்களுக்கான முதல் ஆன்லைன் வானொலி நிலையம் வருகிற 21-ந்தேதி தொடங்கப்பட உள்ளது.

அன்னை அன்பாலயா அறக்கட்டளை இந்த வானொலி நிலையத்தை தொடங்குகிறது. இந்த வானொலி நிலையத்தை மூத்த குடிமக்களே நடத்துகிறார்கள்.

சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள அன்னை அன்பாலயா வளாகத்தில் இந்த வானொலி நிலையம் தொடங்கப்படுகிறது. ஏற்கனவே கோவையில் இதேபோன்ற வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் அனைத்தும் சென்னையில் தொடங்கப்படும் வானொலி நிலையத்துக்கும் ஏற்படுத்தி கொடுக்கப்படுகிறது.

மத்திய சமூக மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தற்போது 10 சமூக வானொலி நிலையங்களுக்கு அங்கீகாரம் அளித்தது. அதில் இந்த வானொலி நிலையமும் ஒன்றாக இருக்கும்.

புதுடெல்லியை சேர்ந்த தேசிய சமூக பாதுகாப்பு நிறுவனத்தால் இந்த வானொலி நிலையம் செயல்படுத்தப்படும். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 4 நிகழ்ச்சிகள் நடத்தப்படும். அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை நோக்கமாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.


சமையல் நிகழ்ச்சிகளும் இதில் இடம்பெறும். நிகழ்ச்சி நடத்தும் மூத்த குடிமக்களுக்காக லேப்-டாப், மைக்ரோ போன்கள் வழங்கப்பட்டு மென்பொருள் மூலம் எடிட்டிங் பயிற்சியும் அளிக்கப்படும்.

சென்னையில் உள்ள முதியோர் இல்லங்களில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு திறமைகள் உள்ளன. வானொலி நிகழ்ச்சிகளை நடத்த அதுபோன்ற மூத்த குடிமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


Tags:    

Similar News