செய்திகள்
சேதமான பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் காண்டூர் கால்வாயில் பக்கச்சுவர் சேதம்

Published On 2021-07-30 11:32 GMT   |   Update On 2021-07-30 11:32 GMT
கால்வாயில் வந்து கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உடுமலை:

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திஅணை உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளில் இருந்து திருமூர்த்திஅணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இதனால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 3 லட்சத்து 77 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் தண்ணீர் விநியோகம் செய்யப்படும். இதுதவிர பூலாங்கினார், கணக்கம்பாளையம், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் மழை தீவிரம் அடைந்து வருவதால் ஆறுகள் மூலமாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

சர்க்கார்பதி மின்உற்பத்திக்கு பின்பு கால்வாயில் வந்த தண்ணீர் நேற்று முன்தினம் மாலை திருமூர்த்திஅணையை அடைந்தது. இந்தநிலையில்  நல்லாற்றுக்கு அருகே கால்வாயின் இடது பக்க சுவர் சேதமடைந்தது.

இதையடுத்து கால்வாயில் வந்து கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடைந்த பின்பு கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து வருகிற 3-ந்தேதி நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News