செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

Published On 2021-07-24 03:42 GMT   |   Update On 2021-07-24 03:42 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும், கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.

இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து 23 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி 30 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு 20 ஆயிரத்து 796 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அந்த அணையில் இருந்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் உச்ச நீர்மட்டம் 124.8 அடியாகும், தற்போது அணை நீர்மட்டம் 103.38 அடியாக உள்ளது.

கர்நாடகாவில் உள்ள 2 அணைகளில் இருந்தும் 36 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் திறந்த விடப்பட்டுள்ளதால் அந்த தண்ணீர் தமிழகத்தை நோக்கி சீறிப்பாய்ந்து வரு கிறது.

கர்நாடக அணைகளில் இருந்து கூடுதலாக திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று இரவு மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இனி வரும் நாட்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 8 ஆயிரத்து 20 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் 6 ஆயிரத்து 841 கன அடியாக சரிந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 73.07 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 72.55 அடியானது.
Tags:    

Similar News