செய்திகள்
செம்மொழி எக்ஸ்பிரஸ்

செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-07-10 10:23 GMT   |   Update On 2021-07-10 10:23 GMT
மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை தென்னக ரெயில்வே வெளியிடவில்லை.
மன்னார்குடி:

கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலை பரவலை தொடர்ந்து பல்வேறு ரெயில்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் ஓரிரு மாதங்களுக்கு பின்னர் படிப்படியாக அனைத்து ரெயில் சேவைகளும் மீண்டும் தொடங்கியது. அப்போது மன்னார்குடியிலிருந்து இயக்கப்பட்ட சென்னை செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி செல்லும் பாமணி எக்ஸ்பிரஸ், ஜோத்பூர் செல்லும் பகத்-கி-கோத்தி எக்ஸ்பிரஸ் ஆகியவை மீண்டும் இயக்கப்பட்டன. ஆனால் கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் மட்டும் மீண்டும் இயக்கப்படவில்லை. கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-ம் அலை பரவலால் நிறுத்திவைக்கப்பட்ட மன்னை எக்ஸ்பிரஸ் மற்றும் பாமணி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகள் தற்போது கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

ஆனால் மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை இயக்குவதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை தென்னக ரெயில்வே வெளியிடவில்லை. மன்னார்குடி மற்றும் திருவாரூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு ஆகிய பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவதற்கு மிகவும் பயனுள்ளதாக இந்த செம்மொழி எக்ஸ்பிரஸ் இருந்தது.

தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு மீண்டும் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் இயங்க தொடங்கி உள்ளதால் சொந்த ஊருக்கு வந்த பணியாளர்கள், தொழிலாளர்கள் மீண்டும் தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். இந்த நேரத்தில் செம்மொழி எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கப்பட்டால் தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். எனவே மன்னார்குடியில் இருந்து கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News