செய்திகள்
66 அடியாக உயர்ந்த வைகை அணை கடல் போல் காட்சி அளிக்கிறது.

வைகை அணை நீர்மட்டம் மீண்டும் 66 அடியை எட்டியது- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Published On 2021-07-09 04:03 GMT   |   Update On 2021-07-09 04:03 GMT
வைகை அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை உள்ளது. இந்த அணையில் 69 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையின் மூலம் திறக்கப்படும் தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களின் பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் பயன்படுகிறது.

தேனி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஆண்டு மழை அதிகம் பெய்ததால் அணைக்கு நீர்வரத்து குறையாமல் இருந்தது. இதனால் கடந்த ஒரு ஆண்டாக வைகை அணையின் நீர்மட்டம் சராசரியாக 60 அடியில் நீடித்தது.

கடந்த மாதம் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 67 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

மேலும் ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் 5 நாட்களுக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் 63 அடியாக குறைந்தது.

இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் விவசாய தேவைக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணைக்கு சராசரியாக வினாடிக்கு 1,500 கனஅடி நீர்வரத்து ஏற்பட்டது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட போதும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. நேற்று பகல் 12 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மீண்டும் 66 அடியை எட்டியது. அணைக்கு வினாடிக்கு 1,564 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்கும் வினாடிக்கு 769 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியதால் பொதுப்பணித்துறை மூலம் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தொடர்ந்து நீர்வரத்து ஏற்பட்டு உயர்ந்து இருப்பதால் வைகை அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News