செய்திகள்
கோப்புபடம்

மார்த்தாண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

Published On 2021-07-07 14:13 GMT   |   Update On 2021-07-07 14:13 GMT
மார்த்தாண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ஒருவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மார்த்தாண்டம்:

அருமனை அருகே இடைக்கோடு பகுதியை சோ்ந்தவர் செலின்குமார், களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவரது வீட்டில் 2 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி இருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்து நாசமானது. இது தொடர்பாக அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படையும் அமைக்கப்பட்டது.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் மர்மநபர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில் அருமனை சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று மேல்புறம் சந்திப்பு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகமான முறையில் நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் குழித்துறை பாலவிளையை சேர்ந்த அருண் (வயது 23) என்பதும், சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அருணை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்படி மற்றொரு நபர் குழித்துறை பாலவிளையை சேர்ந்த வில்லியம் மகன் விஜய் லால் என்றும், இவர்தான் முக்கிய குற்றவாளி என்றும் கூறப்படுகிறது.

மேலும் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீச பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை மார்த்தாண்டத்தில் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள விஜய் லாலை வலைவீசி தேடி வருகிறார்கள். அவரை கைது செய்ததால்தான் பெட்ரோல் குண்டு வீச்சுக்கான முழு காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News