செய்திகள்
பொதுமக்களின் எதிர்ப்பால் தொடர் போராட்டத்தை கைவிட்ட இளம்பெண்

வீட்டின் மேற்கூரையில் அமர்ந்து 5 மணிநேரம் தர்ணா - பொதுமக்களின் எதிர்ப்பால் தொடர் போராட்டத்தை கைவிட்ட இளம்பெண்

Published On 2021-06-25 09:10 GMT   |   Update On 2021-06-25 09:10 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே தந்தையை தாக்கிய போலீசார் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி இளம்பெண் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை தாட்கோ நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ் அந்தோணி (வயது 50). மாற்றுத்திறனாளி.

இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு புளியரை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது தந்தையை தாக்கிய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து துறைரீதியதாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரான்சிஸ் அந்தோணியின் 2-வது மகள் அபிதா (22) செங்கோட்டை அரசு மருத்துவமனை எதிரே உள்ள செல்போன் கோபுரம், அரசு ஆஸ்பத்திரியின் மேல் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், ஏட்டு மஜித் ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் பிரான்சிஸ் அந்தோணியை தாக்கிய போலீசார் மீது கடுமையான பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரி அபிதா தனது வீட்டின் மேற்கூரை மீதும், அவரது அக்காள் பெர்னா ஜூலியா வீட்டின் முன்பு தரையில் அமர்ந்தும் நேற்று மாலை 5 மணிக்கு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஷியாம் சுந்தர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதற்கிடையே அந்த ஊர் பொதுமக்கள், அக்காள்தங்கையின் இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் ஊரின் பெயரை கெடுக்கும் நோக்கத் திலும், பிறரின் தூண்டுதலின் காரணமாகவும் போராட்டம் நடத்துவதாக கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்களிடம் பேசிய பொதுமக்கள், உங்கள் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.தொடர் போராட்டம் நடத்துவதால் நமது ஊரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் எனவே போராட்டத்தை கைவிட்டு வழக்கமான பணிகளுக்கு திரும்ப வேண்டும் என கூறினர்.

இதையடுத்து அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். அபிதா 5 மணி நேரத்திற்கு பின்னர் இரவு 10 மணிக்கு மேற்கூரையில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

Tags:    

Similar News