செய்திகள்
உயர்நீதிமன்ற மதுரை கிளை

கொரோனா 2-வது அலை பரவலுக்கு சட்டசபை தேர்தல்தான் காரணம்: மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

Published On 2021-06-24 02:04 GMT   |   Update On 2021-06-24 02:04 GMT
“கொரோனா 2-வது அலை பரவலுக்கு சட்டசபை தேர்தல்தான் காரணம்” என்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை:

மதுரையைச் சேர்ந்த ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் பல்வேறு உள்ளாட்சி பதவிகள் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து காலியாக உள்ளன. ஆனால் தமிழக தேர்தல் ஆணையம் இந்த பதவிகளுக்கு தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட்களில் தவறான தகவல்களை வழங்கி வருகிறது.

தேர்தலை நடத்தும் நோக்கமே இல்லை. மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவை தான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை. எனவே மாநகராட்சி, நகராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சிகளுக்கான தேர்தல் 21 முறை தமிழகத்தில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இந்த தேர்தல்களை நடத்த உத்தரவிட வேண்டும், என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவுவதற்கு சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் மீண்டும் தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டு, அதனால் தேர்தல் பிரசாரங்களில் கட்சியினர், பொதுமக்கள் ஈடுபட்டால் மீண்டும் கொரோனா பரவ வாய்ப்பாக அமைந்துவிடும். மேலும் தமிழக உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளிவந்த பின்னர் இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படும்” என தெரிவித்து, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
Tags:    

Similar News