செய்திகள்
கோப்புப்படம்

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள்

Published On 2021-06-23 09:22 GMT   |   Update On 2021-06-23 09:22 GMT
ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மட்டும் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா தடுப்பு ஊரடங்கு தளர்வில் ஏற்றுமதி சார்ந்த பனியன் நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் மட்டும் 50 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஆனால் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி உள்ளனர்.    

குறிப்பாக வெளிமாநில மற்றும் உள்ளூர் ஆர்டர்கள் கைநழுவி வருவதுடன், நிதி நெருக்கடியால் ஆடை உற்பத்தி துறையினரும், வேலை இழப்பால் தொழிலாளரும் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உள்நாட்டு ஆடை உற்பத்தி சார்ந்த அனைத்து நிறுவனங்களும் இயங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

இதுகுறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தமிழக அரசுக்கு தொடர்ந்து கடிதம் அனுப்பி அழுத்தம் கொடுத்து வருகிறது. இது தொடர்பாக சைமா தலைவர் ஈஸ்வரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கடந்த 45 நாட்களாக திருப்பூரில் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளதால் தொழில் துறையினருக்கு  நிதி நெருக்கடி, வர்த்தக இழப்பு ஏற்படுகிறது. வேலை இழப்பால், தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர்.

உள்நாட்டு ஆடை நிறுவனங்கள் மீண்டும் இயங்க அறிவிப்பு வெளியிடக்கோரி தமிழக முதல்வருக்கு கடந்த 9,18-ந் தேதிகளில் கடிதம் அனுப்பினோம். ஆனால், ஊரடங்கு தளர்வு அறிவிப்பில் எங்கள் கோரிக்கை பரிசீலிக்கப் படாதது கவலை அளிக்கிறது. 

பின்னலாடை தொழில் துறையின் எதிர்காலம், தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர் நலன் கருதி உள்நாட்டுக்கான ஆடை உற்பத்தி நிறுவனங்கள் 50 சதவீத தொழிலாளருடன் இயங்க விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News