செய்திகள்
கரடி

கோவை மருதமலை கோவிலில் சுற்றி திரியும் கரடி

Published On 2021-05-30 10:15 GMT   |   Update On 2021-05-30 10:15 GMT
கொரோனா ஊரடங்கால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததாலும், எந்தவித சலசலப்பும் இல்லாததாலும் மருதமலை முருகன் கோவில் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

வடவள்ளி:

கொரோனா தொற்றின் 2-வது அலை காரணமாக கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கிறது.

இதுதவிர கோவில்களுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில், மாசாணியம்மன் கோவில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் ஆட்கள் நடமாட்டமின்றி இருக்கிறது. அங்கு வழக்கமான பூஜைகள் மட்டுமே நடந்து வருகிறது.

கோவை மருதமலையில் முருகனின் ஏழாம் படை வீடு என அழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலை சுற்றிலும் வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனத்தை விட்டு வெளியில் வந்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளன.

தற்போது கொரோனா ஊரடங்கால் கோவிலுக்கு பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் கோவில் வெறிச்சோடி காணப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாததாலும், எந்தவித சலசலப்பும் இல்லாததாலும் மருதமலை முருகன் கோவில் பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக மருதமலை முருகன் கோவிலில் உள்ள பாம்பாட்டி சித்தர் கோவில் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று சுற்றி திரிந்துள்ளது. இதனை அங்கு வசித்து வரக்கூடிய மலைவாழ் மக்கள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாததால், அடிவாரத்திலிருந்து மலைக்கு செல்லும் சாலை, படிக்கட்டு வழிப்பாதை ஆகியவை வெறிச்சோடி காணப்படுகிறது. மக்கள் மற்றும் வாகனப் போக்குவரத்து இல்லாததால் அங்கு அமைதியான சூழல் நிலவுகிறது. இதனால், கோவிலை ஒட்டி ய வனப்பகுதியில், வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. தொடர்ந்து வனவிலங்குகளை நாங்கள் கண்காணித்து வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News