செய்திகள்
கோப்புப்படம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தினமும் 15 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் பயன்பாடு

Published On 2021-05-13 22:12 GMT   |   Update On 2021-05-13 22:12 GMT
திருப்பூர் அரசு மருத்துவமனையில் நாள் ஒன்றுக்கு 15 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் செலவாகி வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் சிகிச்சை பெறும் வகையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது அரசு தலைமை மருத்துவமனையில் 191 கொரோனா படுக்கைகள் இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கொரோனா படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவமனையில் தற்போது 325 கொரோனா படுக்கைகள் உள்ளன. இதில் ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு 155 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்யப்பட்டன. தற்போது கூடுதலாக 45 ஆக்சிஜன் படுக்கைகள் என 200 ஆக்சிஜன் படுக்கைகள் அரசு மருத்துவமனையில் உள்ளன.

மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்சிஜன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தங்கு தடையின்றி ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே ஆக்சிஜன் தொட்டி திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள நிலையில் கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதில் விரைவில் ஆக்சிஜன் நிரப்பும் பணியும் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நாள் ஒன்றுக்கு அரசு மருத்துவமனையில் 15 லட்சம் லிட்டர் வாயு ஆக்சிஜன் செலவாகி வருகிறது. கொரோனா நோயாளிகள் மற்றும் மற்ற நோயாளிகளுக்கு ஆபரேஷன் செய்ய என செலவாகி வருகிறது. தினமும் ஆக்சிஜன் நிரப்பும் பணி நடந்து வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு திருப்பூரில் ஏற்படாது என அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News