செய்திகள்
உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம்

உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்

Published On 2021-05-09 03:10 GMT   |   Update On 2021-05-09 03:10 GMT
தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யாக தாமரைக்கண்ணன் பதவியேற்றார்.
சென்னை:

தமிழக போலீஸ்துறையில் உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பதவியிடம் காலியாக இருந்து வந்தது. இப்பொறுப்பை உளவுத்துறை ஐ.ஜி. ஈஸ்வரமூர்த்தி கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற மறுநாளே உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக நியமித்து தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் நேற்று முன்தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.

அதேபோன்று தமிழக போலீஸ் நல்வாழ்வுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். அப்பதவியில் இருந்த ஜெயந்த் முரளி, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் உடனடியாக நேற்றே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் முதலூர் ஆகும்.

இவர் 1995-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக போலீஸ் துறையில் நுழைந்தார். தர்ம புரி மாவட்ட உதவி சூப்பிரண்டாக பணியைத் தொடங்கினார். 2004-ம் ஆண்டு மதுரை துணை கமிஷனராக இருந்தார். தொடர்ந்து பல ஊர்களில் பணியாற்றினார்.

உளவுப்பிரிவு ஐ.ஜி., பயங்கரவாத செயல்களை ஒடுக்கும் ‘கியூ' பிரிவு, பாதுகாப்பு பிரிவு, மேற்கு மண்டல ஐ.ஜி., மதுரை, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் என பல்வேறு பொறுப்புகளில் செயலாற்றியவர். டேவிட்சன் தேவாசீர்வாதத்துக்கு ‘ஜனாதிபதியின் காவல் பதக்கம்' அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்ட தாமரைக்கண்ணனும் நேற்றே பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடம் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து கூறினார்.

சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1987-ம் ஆண்டு துணை சூப்பிரண்டாக போலீஸ்துறை பணியில் சேர்ந்தார். 1993-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

சி.பி.சி.ஐ.டி. உளவுப்பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, சென்னை மயிலாப்பூர், பரங்கிமலை துணை கமிஷனர், திருச்சி எஸ்.பி., வேலூர் சரக டி.ஐ.ஜி., சென்னை நுண்ணறிவுப்பிரிவு, போக்குவரத்துப் பிரிவு, தென்சென்னை சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனர், சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. என போலீஸ்துறையில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

இவருடைய சிறப்பான பணியை கவுரவிக்கும்விதமாக, தமிழ்நாடு முதல்-அமைச்சரின் பதக்கம் (1998), ஜனாதிபதியின் துணிச்சலான போலீஸ் பதக்கம் (1999), ஜனாதிபதியின் சிறப்பான போலீஸ் பணிக்கான பதக்கம் (2004), ஜனாதிபதி தகைசால் பதக்கம் (2014) இவரைத் தேடி வந்தன. கடந்த 2019-ம் ஆண்டு அத்திவரதர் தரிசனத்தின்போது பாதுகாப்பு பணியை சிறப்பாக மேற்கொண்டதற்காக தமிழக அரசின் சிறப்பு பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டது.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு விசாரணைப் பிரிவு எஸ்.பி. யாக தாமரைக்கண்ணன் இருந்தபோது துணிச்சலாக செயல்பட்டு, பயங்கர ஆயுதங்களுடன் குற்றவாளிகளைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News