செய்திகள்
மல்லிகை பூக்கள்

கோயம்பேட்டில் குவியும் வாசனை மல்லி

Published On 2021-04-28 07:01 GMT   |   Update On 2021-04-28 07:01 GMT
கர்நாடகாவில் ஊரடங்கு, தமிழகத்திலும் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதால் பூக்கள் தேவை குறைந்துவிட்டது.
சென்னை:

மல்லிகை பூ கிலோ ரூ. 600-க்கு மேலும் விற்றதுண்டு. ஒரு முழம் மல்லியை ரூ.50 கொடுத்து வாங்க வேண்டியுள்ளதே என்று பெண்கள் ஆதங்கப்பட்டதும் உண்டு. ஆனால் தற்போதைய நிலை தலைகீழாகிவிட்டது.

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ லாரி லாரியாக வந்து குவிகிறது. நேற்று ஒருகிலோ மல்லி ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையானது. இன்று ரூ.60 முதல் 80 வரை விற்கிறது. ஆனால் வாங்குவதற்குதான் ஆட்கள் இல்லை.

அதிக அளவில் வாசனை மல்லி தேக்கம் அடைவதால் அவற்றை இங்கிருந்து செண்டு தயாரிக்கும் கம்பெனிகளுக்கு அனுப்புகிறார்கள்.

முன்பு சென்னை கொட்டிவாக்கத்தில் செண்டு தயாரிப்பு மும்முரமாக இருந்தது. ஆனால் தற்போது குறைந்துவிட்டதால் தேனி, திண்டுக்கல் பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இதுபற்றி பூ மொத்த வியாபாரியான எஸ்.பி.எல்.பாண்டியன் கூறியதாவது:-

கடந்த வாரம் ஒருகிலோ மல்லி ரூ.500 முதல் 600 வரை விற்பனையானது. இப்போது கர்நாடகாவில் ஊரடங்கு, தமிழகத்திலும் கோவில்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டதால் பூக்கள் தேவை குறைந்துவிட்டது.

மல்லியை பொறுத்தவரை செங்குன்றம், ஆத்துப்பாக்கம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து வருகிறது. இன்று மட்டும் 15 டன் வந்துள்ளது.

அதேபோல் சம்பங்கியும் கடந்த வாரம் கிலோ ரூ. 300 வரை விற்றது இன்று கிலோ ரூ. 20 முதல் 30-க்கு விற்கிறது. மல்லியும், சம்பங்கியும் செண்டு தயாரிக்க அதிக அளவில் அனுப்பப்பட்டுகிறது. அவர்களின் கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.50-க்கும் குறைவுதான்.

ரோஜா பெங்களூர், ஓசூர் பகுதிகளில் இருந்தும், சாமந்தி கடப்பா, ஓசூர், சேலம் பகுதிகளில் இருந்தும் வருகிறது. அங்கும் விற்பனை சரிந்ததால் வழக்கத்தைவிட அதிக அளவில் வருகிறது.

ரோஜா கிலோ ரூ.20 முதல் 50-க்கும், சாமந்தி ரூ.70 முதல் 100-க்கும் விற்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News