செய்திகள்
வழக்கு பதிவு

தமிழகம் முழுவதும் 6 நாட்களில் ‘மாஸ்க்’ அணியாத 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் மீது வழக்கு

Published On 2021-04-14 10:03 GMT   |   Update On 2021-04-14 10:03 GMT
கடந்த 8-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதை அடுத்து மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் போலீசார் முககவசம் அணியாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த 8-ந் தேதி முதல் நேற்று வரை 6 நாட்களில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 806 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஒரேநாளில் 8,458 வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 44 ஆயிரத்து 984 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மண்டலத்துக்குட்பட்ட மாவட்டங்களில் நேற்று ஒரேநாளில் 17,168 பேர் மாஸ்க் அணியாமல் சிக்கினர். 6 நாட்களில் 74 ஆயிரத்து 815 பேர் பிடிபட்டுள்ளனர்.

மத்திய மண்டலத்தில் நேற்று 7,061 பேரும்,மேற்கு மண்டலத்தில் 6,424 பேரும் மாஸ்க் அணியாமல் நேற்று பிடிபட்டுள்ளனர். கடந்த 6 நாட்களில் மேற்கு மண்டலத்தில் 34 ஆயிரம் பேரும், மத்திய மண்டலத்தில் 37 ஆயிரம் பேரும் முககவசம் அணியாமல் அபராதம் செலுத்தி உள்ளனர்.

சென்னையிலும் கடந்த 6 நாட்களாக போலீசார் முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலித்து வருகிறார்கள். நேற்று 1,254 பேர் மாஸ்க் அணியாமல் பிடிபட்டுள்ளனர். இவர்களிடம் ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்து 800 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

6 நாட்களில் சுமார் 4 ஆயிரத்து 844 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையாக ரூ.9 லட்சத்து 74 ஆயிரத்து 800 வசூலாகி உள்ளது.

இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத 1,195 பேர் மீது நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் 9 ஆயிரத்து 7 பேர் மீது இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் வரையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை தொடரும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News